2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி வலுவாக இணைந்து செயல்பட்டு வருகிறது. பின்னர், அதிமுக – தவெக கூட்டணி அமையப் போவதாக தகவல் வெளியானது.
ஆனால், தவெக தலைமையில் தான் கூட்டணி என்று கடந்த அக்.27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், எந்த கட்சியுடனும் தவெக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மேலும், பாஜக மற்றும் அதிமுக ஆகியோர் தவெக தங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அழைத்து வருகிறார்கள். இந்நிலையில், தவெகவின் தேர்தல் வியூக ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருகிறார். இவர் தான், 2016இல் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று பாமகவுக்காக தேர்தலில் பணியாற்றினார்.
இந்நிலையில், ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், திமுக – அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாமகவை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாமகவின் அன்புமணி தரப்புடன் இந்த பேச்சுவார்த்தையை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை அதிமுக – பாஜக கூட்டணியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த காலங்களில் பாமக, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்த்து வந்துள்ளது. ஆனால், விஜய் கட்சி தொடங்கி சுமார் ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இதுவரை அன்புமணி விமர்சிக்கவில்லை. தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதால் தான், அவரை விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Read More : கன்னட மொழி விவகாரம்..!! வெச்சி செய்த உயர்நீதிமன்றம்..!! அசராத கமல்..!! சென்னையில் பரபரப்பு பிரஸ் மீட்..!!