மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காலி மனை ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான போபாலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சமீர் என்பவரை தீவிரமாகக் காதலித்த சியா, குடும்பத்தினரை எதிர்த்து அவரை திருமணம் செய்துகொண்டு போபாலுக்கு வந்துள்ளார்.
ஏற்கனவே இருமுறை திருமணமான சமீர், தனது மூன்றாவது மனைவியான சியாவை அக்கம் பக்கத்தினரிடம் ‘மைத்துனி’ என்று பொய் சொல்லி ஒரே வீட்டில் தங்க வைத்துள்ளார். சமீரின் இரண்டாவது மனைவிக்கும் சியாவுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலால், இரண்டாவது மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், பிப்ரவரி 9-ம் தேதி சமீருக்கும் சியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சமீர், சியாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க திட்டமிட்ட சமீர், தனது இரண்டாவது திருமணத்தின் போது வரதட்சணையாக கிடைத்த அதே இரும்புப் பெட்டிக்குள் சியாவின் உடலை திணித்து, அருகில் இருந்த செப்டிக் டேங்கிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சடலம் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது. ஆனால், சியாவின் கையில் இருந்த ‘தீப்’ (Deep) என்ற பச்சை குத்தப்பட்ட (Tattoo) அடையாளத்தை வைத்து போலீஸார் அவரை அடையாளம் கண்டனர். இன்ஸ்டாகிராம் மோகமும், முறையற்ற திருமண வாழ்க்கையும் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்துள்ள இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள கொலையாளி சமீரை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



