கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா, மல்லனசந்திரா என்ற கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான விட்டல் என்ற நபர், பல ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், முதல் மனைவி இறந்ததும், இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
ஆனால், இரண்டாவது மனைவி தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதால், விட்டல் நொந்துபோனார். இதனையடுத்து, விட்டல் தனது கிராமத்தை சேர்ந்த 26 வயதான வனஜாக்ஷி என்ற இளம் விதவையுடன் பழக்கம் வளர்த்துள்ளார். கணவனை இழந்த வனஜாக்ஷிக்கும், விட்டலுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம், கள்ளக்காதலாக மலர்ந்தது.
இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், வனஜாக்ஷி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் தனது காதலன் விட்டலுடன் இணைந்து சில வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையே, ஆகஸ்ட் 30ஆம் தேதி, வனஜாக்ஷி ஒருவருடன் காரில் பன்னரகட்டாவிலிருந்து பசவனபுரா நோக்கி சென்றது பற்றி விட்டலுக்கு தகவல் சென்ற நிலையில், அந்த காரை பின்தொடர்ந்தார். உளிமாவு அருகே, கொம்மதேவனஹள்ளி பகுதியில் காரை தடுத்து நிறுத்திய அவர், வனஜாக்ஷியிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் வன்முறையாக மாறியது. அப்போது, ஆத்திரமடைந்த விட்டல், தனது காரில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்து வனஜாக்ஷி பயணித்த காரின் மீது ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது, வனஜாக்ஷியும், அவருடன் இருந்த நபரும் தப்பியோட முயன்றனர்.
பின்னர், வனஜாக்ஷியை நடுரோட்டில் மடக்கிப் பிடித்த விட்டல், அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் அவர் கதறி துடித்தார். அப்போது, அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால், தீக்காயம் அடைந்த வனஜாக்ஷி, உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவரது உடலின் 60 சதவிகிதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், தீவிர சிகிச்சையிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சில நாட்களில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உளிமாவு காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.