துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு துணை குடியரசு தேர்தல் தொடங்கியது.. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டன.. குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழரான சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.. இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டியை வீழ்த்தி அவர் வென்றுள்ளார்.. இந்த தேர்தலில் 452 வாக்குகள் பெற்று சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்..
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தார்.. துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 781 பேர், தகுதி பெற்ற நிலையில் 767 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்.. இதில் 15 வாக்குக்ள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன..
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு 3வது தமிழர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார்.. சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமனுக்கு பிறகு துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் தமிழர் சி.பி ராதாகிருஷ்ணன் ஆவார்..
யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தில் பிறந்தார். அவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி V.O. சிதம்பரம் கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை (BBA) பட்டம் பெற்றார். மேலும் கல்லூரி அளவிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் இளம் வயதிலேயே பல்வேறு ஆர்வங்களை வெளிப்படுத்தினார்.
ராதாகிருஷ்ணன் தனது 17 வயதில் பாரதிய ஜன சங்கம் மற்றும் RSS இல் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். அவரது நீண்ட அரசியல் வாழ்க்கை 1974 இல் ஜன சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது தொடங்கியது..
ஆரம்பத்தில், 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் கோவை மக்களவை தொகுதியில், இரண்டு முறை எம்.பி.யாக வெற்றி பெற்றதன் மூலம் ராதாகிருஷ்ணன் தேசிய கவனத்தைப் பெற்றார். 1998 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது, ஏனெனில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 3 பாஜக வேட்பாளர்களில் ஒருவராக இருந்தார், இது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மைல்கல்லாகும். அவர் அங்கு இருந்த காலத்தில் ஜவுளி நிலைக்குழுவின் தலைவராகவும், நிதி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான குழுக்களிலும் பங்கேற்றார்.
2004 ஆம் ஆண்டில், அவர் ஐ.நா. பொதுச் சபைக்கான இந்திய சட்டமன்றக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.. அங்கு அவர் பேரிடர் உதவி மற்றும் மனிதாபிமான ஒருங்கிணைப்பு பற்றி பேசினார். 2004 முதல் 2007 வரை பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றுவதன் மூலம் தமிழ்நாட்டில் தனது அரசியல் வாழ்க்கையை மேம்படுத்தினார். இந்த நேரத்தில், மாநிலம் முழுவதும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஊக்குவிப்பதற்காக 19,000 கிலோமீட்டர், 93 நாள் “ரத யாத்திரை”யை அவர் மேற்கொண்டார்.
பிப்ரவரி 2023 இல், பிரதமர் நரேந்திர மோடியால் ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற முதல் நான்கு மாதங்களில் உள்ளூர் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள 24 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றார். ஜூலை 2024 இல் மகாராஷ்டிராவின் ஆளுநரானார். அதே நேரத்தில் அவர் தெலுங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். ஜூலை 2024 வரை இந்தப் பதவிகளில் பணியாற்றினார்.. தற்போது துணை குடியரசு தலைவரான 3வது தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்..