புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில், சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற சிவாலயமாக திகழ்கிறது. புதுக்கோட்டையிலிருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலம், சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலமான 1305 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இக்கோவிலில் காணப்படும் நந்தி, இறைவனின் “நாமம்” உடன் இணைந்து இருப்பதால், இத்தலம் நாமபுரீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. மேலும், சோழரும் பாண்டியரும் சேர்ந்து இக்கோவிலை கட்டியிருக்கலாம் என்பதற்கான சான்றாக 35 கல்வெட்டுகள் இங்குள்ளது.
இவ்வாலயத்தில் சிவபெருமானுடன், மகாவிஷ்ணுவுக்கும், ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. இதனால், ஒரே இடத்தில் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் அபூர்வ வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக புதன்கிழமை பிரதோஷம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. புதனுக்கும் சனிக்கும் ஆதிதேவதையாக மகாவிஷ்ணு இருப்பதால், இங்கு வழிபடும் போது சனி, புதன் தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 25 முதல் தை 10 வரை, அதிகாலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை சூரியன் தனது ஒளிக்கதிர்களை நேரடியாக சிவபெருமானின் மீது வீசி பூஜை செய்வது போல் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த அற்புத தரிசனம் மூன்று நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்!
இக்கோவிலில் குருபகவானின் எதிரில் ஆதி மாணிக்கவாசகர் அருள் வடிவில் காணப்படுகிறார். இதனால், ஜாதகத்தில் குரு நீச்சம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் குருபலம் பெறலாம் என நம்பப்படுகிறது. அதனால் இத்தலம் “இரண்டாவது குரு ஸ்தலம்” எனவும் அழைக்கப்படுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக பெற்றோர் தங்கள் குழந்தைகளை தற்காலிகமாக தத்துக் கொடுத்து, இறைவனுடைய பெயரைச் சூட்டும் பழக்கம் இன்றும் இங்கே நடைபெற்று வருகிறது.