அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடி அருகே உள்ள கள்ளக் காடு பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள், அங்குள்ள மரம் ஒன்றில் ஒரு ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்ததில், சடலங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. அவர்கள் உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சடலங்களுக்கு அருகே இருந்த அடையாள அட்டைகள் மற்றும் உடமைகளை வைத்து, அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னணி என்ன..?
விசாரணையில், உயிரிழந்தவர் சின்னமனக்குடியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் விஜய் (35) என்பதும், அவருடன் இருந்தவர் நுரையூர் கிராமத்தைச் சேர்ந்த தேவி (35) என்பதும் தெரியவந்தது. இருவருக்குமே ஏற்கனவே திருமணமாகி, தலா இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் உறவினர்களுக்கும், ஊர் மக்களுக்கும் தெரியவரவே, இரு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஊர் மக்களின் கண்டனம் மற்றும் குடும்பத்தாரின் நெருக்கடி காரணமாக, சில காலத்திற்கு முன்பு இந்த ஜோடி ஊரை விட்டுத் தப்பி ஓடியது. அப்போது காவல்துறையினர் தலையிட்டு அவர்களை மீட்டு, அறிவுரை கூறி தனித்தனியே பிரித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமலும், தங்கள் உறவை விட முடியாமலும் தவித்த இருவரும், மீண்டும் ஊரை விட்டு வெளியேறி இந்தக் காட்டுப் பகுதிக்கு வந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
தங்கள் குடும்பங்களையும், தங்களை மட்டுமே நம்பியிருந்த 4 பிஞ்சு குழந்தைகளையும் தவிக்கவிட்டு இவர்கள் எடுத்த இந்த முடிவு, அரியலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



