தமிழர்களின் வீரத்திற்கும், தொன்மைக்கும் சான்றாகத் திகழும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 2026-ஆம் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டுத் தமிழகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவிலான வாடிவாசல்களையும், காளைகளையும் கொண்ட மாவட்டமான புதுக்கோட்டை, இந்த ஆண்டின் முதல் போட்டியை நடத்தும் பெருமையைப் பெற்றுள்ளது. மாவட்டத்தின் பாரம்பரியமான தச்சங்குறிச்சி கிராமத்தில், புனித விண்ணேற்பு அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உற்சாகமாக தொடங்கின.
இந்த வீர விளையாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 900 துடிப்பான காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சீறிப்பாயும் காளைகளை அடக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில், அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
முறைப்படி வாடிவாசலில் இருந்து முதலில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயக் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக சீறிப்பாய, காளையர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், காயமடையும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். புதுக்கோட்டையில் தொடங்கியுள்ள இந்த ஜல்லிக்கட்டு உற்சாகம், அடுத்து வரும் பொங்கல் பண்டிகை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் தொடரும் என்பதால் காளை ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



