சிவனும் பார்வதியும் இணைந்த தோற்றம் அர்த்தநாரீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. இது ஆண் – பெண் சமத்துவத்தை வெளிப்படுத்தும் சைவ சமயத்தின் அரிய சின்னமாக கருதப்படுகிறது. இதில் சிவன் வலப்பக்கமாகவும், பார்வதி இடப்பக்கமாகவும் காட்சியளிக்கின்றனர். அந்த அரிய அர்த்தநாரீஸ்வரராக சிந்தாமணி நாதர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிந்தாமணி நாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார். தாயாராக இடவாகவல்லி அம்பாள் காட்சியளிக்கிறார்.
மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி சிவபெருமானை மட்டுமே வழிபட்டு வந்தார். சக்தி வேறு, சிவன் வேறு என்ற எண்ணத்தில் பார்வதி தேவியை வணங்க மறுத்தார். இதனால் பார்வதி தேவி கோபித்து பூமிக்கு வந்து புளியமரத்தின் அடியில் தவம் செய்தார். அப்போது சிவபெருமான், பார்வதியை தன்னுள் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்து உண்மையை உணர்த்தினார்.
இப்பகுதியை ஆண்ட மன்னன் ரவிவர்மன் தனது மகன் குலசேகரனின் நோய் நீங்க வேண்டி இறைவனை வேண்டினார். சிவனடியார் ஒருவரின் ஆலோசனையின்படி சிந்தாமணி நாதரை வணங்கியதும் நோய் குணமானது. இதற்காக மன்னன் பெரிய அளவில் கோயில் கட்டியதாகக் கூறப்படுகிறது.
அர்த்தநாரீஸ்வரரின் தலையில் கங்கை, வலப்புறத்தில் சிவனின் பிறை, சூலம், கபாலம், இடப்புறத்தில் அம்பாளின் ஜடை, அங்குசம், பாசம், பூச்செண்டு ஆகியவை காட்சியளிக்கின்றன. சுவாமி பக்கம் வேஷ்டி, அம்பாள் பக்கம் சேலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கருப்பை ஆறு (கருப்பா நதி) யில் நீராடினால் விரைவில் பிள்ளைப் பாக்கியம் கிட்டும் என நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் இங்கு வழிபட்டால் மீண்டும் இணைவார்கள் என்றும் ஐதீகம்.
Read more: ஒரே சார்ஜில் அதிக தூரம் போகணுமா? அப்ப இந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் பெஸ்ட் சாய்ஸ்!