தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் வியூகங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. இம்முறை வெறும் கள எதார்த்தங்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து இபிஎஸ் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணங்கள், வேட்பாளர் தேர்வுகள் மற்றும் பிரசாரப் பயணங்களின் தொடக்கம் ஆகியவற்றில் கிரக நிலைகளின் சாதகமான அம்சங்களை அவர் கூர்ந்து கவனிப்பதாக தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளையொட்டி நேற்று அதிமுகவின் முதற்கட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன.
சரியாக காலை 11 மணிக்கு இந்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டது தற்செயலானது அல்ல, மாறாக ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி திட்டமிடப்பட்டது என தகவல்கள் கசிகின்றன. நேற்று சிவராத்திரி மற்றும் சதுர்த்தசி திதி இணைந்த சுப ஓரை நேரத்தில், இபிஎஸ்-ஸின் ஜாதகத்திற்கு சாதகமான அம்சங்கள் இருந்ததால், அதே தருணத்தில் வாக்குறுதிகளை வெளியிட அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த ‘நட்சத்திர வியூகம்’ தங்களுக்கு மீண்டும் அதிகார பலத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அதிமுகவின் இந்த ‘ஜோதிடப் பாசறை’ நகர்வுகள் எதிர்க்கட்சிகளிடையே விமர்சனங்களை எழுப்ப தவறவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இத்தகைய போக்கை விமர்சித்து வந்தாலும், இபிஎஸ் தனது நிலையில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. கூட்டணிக் குழப்பங்கள் மற்றும் உட்கட்சிச் சவால்களைக் கடந்து, ஒரு தெளிவான வெற்றியைப் பதிவு செய்யத் துடிக்கும் அதிமுக தலைமைக்கு, இந்த ஆன்மீக நம்பிக்கைகள் ஒரு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் இந்த ‘கிரக பலம்’ அவருக்கு கைகொடுக்குமா அல்லது களத்தில் மக்களின் தீர்ப்பு வேறு விதமாக அமையுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



