ஹைதராபாத் மேடிப்பள்ளி பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலன் மற்றும் அவனது நண்பனுடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக் (45), தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூர்ணிமா (36) வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் 22 வயதான பலேட்டி மகேஷ் என்ற இளைஞருடன் பூர்ணிமாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களின் உறவு குறித்து அறிந்த அசோக், தனது மனைவியைப் பலமுறை கண்டித்து எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமா, கணவனைத் தீர்த்துக்கட்டினால் மட்டுமே தனது காதலுக்கு விடிவு பிறக்கும் என முடிவு செய்து சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த டிசம்பர் 11-ம் தேதி அசோக் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த காதலன் மகேஷ் மற்றும் அவனது நண்பன் சாய் ஆகியோருடன் இணைந்து பூர்ணிமா தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
அசோக்கின் கழுத்தில் துப்பட்டாவை சுற்றி மூச்சுத்திணறச் செய்து அவர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர், தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்களையும் காவல்துறையினரையும் நம்ப வைக்க பூர்ணிமா முயன்றுள்ளார். இருப்பினும், அசோக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
அந்த அறிக்கையில், அசோக் மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டார் என்பதும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து பூர்ணிமாவிடம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பூர்ணிமா, அவரது காதலன் மகேஷ் மற்றும் நண்பன் சாய் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : 9% வட்டியிலேயே தனிநபர் கடன்..!! SBI முதல் HDFC வரை..!! வட்டி விகிதங்களில் வந்த அதிரடி மாற்றம்..!!



