திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவரது மனைவி அர்ஷியா. அக்பர் பாஷா தனியார் தொழிற்சாலையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தை உள்ளது. மூன்றாவது பெண் குழந்தை பிறந்து மூன்று மாதம் மட்டுமே ஆகிறது. இந்நிலையில் அர்ஷியாவின் தாய் பல்வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அர்ஷியா மற்றும் அவருடைய தாய் வீட்டில் தேடி வந்த நிலையில் தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்ப்போம் என்று தொட்டியை திறந்து உள்ளன. அப்போது குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை வரவழைத்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் வசிக்கும் வீடு மேல் மாடியில் உள்ளது. 3 மாதமே ஆன குழந்தை எப்படி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது..? யாராவது கொலை செய்யும் நோக்கத்தில் இதை செய்திருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் போட்டது தாய் அர்ஷியா என்பது தெரிய வந்தது.
அர்ஷியா அளித்த வாக்குமூலத்தின்படி, “குழந்தை அழுது கொண்டே இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை, மேலும் மூன்றாவது குழந்தை பிறந்தது முதல் எனக்கும் என் கணவருக்கும் சண்டை ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாக குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற தாயே தன்னுடைய மூன்று மாத பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



