உத்தரப்பிரதேச மாநிலம், காஜிபூர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில், அந்தப் பெண் ஆடைகள் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து, தொடை மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்த பெண் வாரணாசியைச் சேர்ந்த தீப்தி என்றும் அவரது கணவர் சந்தீப் சிங் என்பதும் தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகராறுகள் தான் கொலையில் முடிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, கணவர் சந்தீப் சிங்கை உடனடியாக கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஜிபூர் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், “உடலில் உள்ள காயங்களின் அடிப்படையில், இது கொலையாக இருக்கலாம் என தெரிகிறது. சந்தீப் சிங்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். மேலும், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



