ஒடிசா மாநிலத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது..
நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. சிறு குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை எந்த பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது..
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஒடிசாவின் மல்கன்கிரியில் ஒரு நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய 15 வயது பள்ளி மாணவியை 3 ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்..
அவர்களிடம் இருந்து தப்பி, அந்த சிறுமி வீடு திரும்ப முயன்றபோது, பிஜகாட்டியில் உள்ள மல்கன்கிரி-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் ஒரு லாரி ஓட்டுநர் அவளை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இறுதியில் உள்ளூர்வாசிகள் சிலர் அச்சிறுமியை மீட்டு போலீசில் புகார் அளித்தனர்.
லாரி ஓட்டுநர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். மல்கன்கிரி சதார் தொகுதியைச் சேர்ந்த சிறுமி, தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை தாமதமாக வீடு திரும்பும் போது, மூன்று நபர்களால் கடத்தப்பட்டு மல்கன்கிரி நகரத்திலிருந்து 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த மூவரும் அந்த சிறுமியை சித்திரவதை செய்து, மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மல்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் (SP) வினோத் பாட்டீல் இதுகுறித்து பேசிய போது “ லாரி ஓட்டுநர் உட்பட குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மனோஜ் ஹரிஜன், ரோஹித் குமார் ஹியால், பீரா பாரதியா மற்றும் ஓட்டுநர் சோபம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதனிடையே ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ “பெண்களுக்கு எதிரான ஒரு குற்ற அலை ஒடிசாவை வாட்டி வதைக்கிறது… பாலியல் வன்கொடுமைகளின் இந்த அதிகரிப்பு சட்ட அமலாக்கத்தின் தோல்வியை பிரதிபலிக்கிறது. காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் குறுக்கீடு மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, பொறுப்புக்கூறல் பலவீனமடைகிறது மேலும் பெண்களும் சிறுமிகளும் முதலில் விலை கொடுக்கிறார்கள்.
இந்த கவலையுடன், அமெரிக்க அரசாங்கம் கடந்த மாதம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டது. அதன்படி அமெரிக்க ஊழியர்கள் தலைநகரங்களுக்கு அப்பால் பயணம் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டிய 6 இந்திய மாநிலங்களில் ஒடிசாவை பட்டியலிட்டது. அவசர மற்றும் தீர்க்கமான போலீஸ் நடவடிக்கை இல்லை எனில் இந்த பிரச்சனை மேலும் வளரும். பாதுகாப்பை மீட்டெடுக்கவும், பெண்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த அமைப்பில் அவர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் பாஜக அரசாங்கம் உடனடியாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மன்றத்திலும் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பிற்காக பிஜேடி தொடர்ந்து குரல் எழுப்பும், ”என்று குறிப்பிட்டுள்ளார்..