மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படம் 1991ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், விஜயகாந்தின் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு போன்ற முன்னணி நடிகர்களின் 100-வது திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படம் வசூலை வாரிக் குவித்தது. மேலும், இந்தப் படத்தில்தான் மன்சூர் அலிகான் ஒரு பயங்கரமான வில்லனாக அறிமுகமானார்.
இப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான ‘ஆட்டமா தேரோட்டமா’ போன்ற ஹிட் பாடல்களுடன், வசனங்கள் மற்றும் சண்டைக்காட்சிகளுடன் உருவான இந்த படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இப்படம் ரீ ரிலீசான முதல் நாளில் இருந்தே தினமும் ரூ.2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் சமீபத்திய படமான ‘மதராஸி’ கூட வெளியாகி 6-வது நாளில் ரூ.2 கோடிக்கும் கீழே வசூல் செய்த நிலையில், ‘கேப்டன் பிரபாகரன்’ இரண்டாவது வாரத்திலும் தொடர்ந்து ரூ.2 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது.
திரையரங்குகளில் படம் வெளியாகி தற்போது 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில், விஜயகாந்தின் ரசிகர்கள் கேப்டன் பிரபாகரன் படத்தை கொண்டாடி வருகின்றனர். 25 நாட்களில் சுமார் ரூ.35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து, மீண்டும் ஒருமுறை விஜயகாந்தின் ஆளுமையை நிரூபித்துள்ளது.
Read More : வாகனங்கள் வாங்கப் போறீங்களா..? தடாலடியாக குறையப்போகும் விலைகள்..!! முழு லிஸ்ட் இதோ..!!