திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சோதனைச்சாவடியில், ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக புல்லரம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காரை மடக்கிப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், பூண்டி அருகே சென்றுகொண்டிருந்த அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. தொடர்ந்து துரத்திச் சென்ற போலீசார், காரை குறுக்கே வழிமறித்துள்ளனர். அப்போது, காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி வயல்வெளிக்குள் வெவ்வேறு திசைகளில் ஓடினர்.
இதையடுத்து, வயல்வெளிக்குள் அவர்களை துரத்தி சென்ற போலீசார், ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திராவில் இருந்து 390 கிலோ குட்கா கடத்தி வந்ததும், அதை சென்னையில் விற்க எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. பிடிபட்டவர் ராஜஸ்தானைச் சேர்ந்த 26 வயது ஜெகதீஷ் சௌத்ரி என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜெகதீஷ் சௌத்ரியை கைது செய்த போலீசார், குட்கா பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ராம் என்ற மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.