அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ (Return to Nature) என்ற பெயரில் மயான காப்பகம் நடத்தி வந்த தம்பதியினர், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் சிதைத்து, அவர்களின் உறவினர்களை ஏமாற்றிய கொடூரமான மோசடி உலக நாடுகளை உலுக்கியுள்ளது. மனிதாபிமானத்தை மறந்த ஜான் ஹால்ஃபோர்ட் மற்றும் அவரது மனைவி கேரி ஹால்ஃபோர்ட் ஆகியோரின் இந்த வக்கிரம் நிறைந்த செயல், தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனை வரை வந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக, எரிக்கவோ அல்லது அடக்கம் செய்யவோ தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட சுமார் 190-க்கும் மேற்பட்ட உடல்களை, பென்ரோஸ் நகரில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இத்தம்பதியினர் போட்டு வைத்துள்ளனர். 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம், அந்தப் பகுதியிலிருந்து வீசிய சகிக்க முடியாத துர்நாற்றம் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தபோதுதான் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
போலீசார் அங்கு நுழைந்தபோது, கட்டிடத்திற்குள் மலைபோல் குவிந்து கிடந்த அழுகிய சடலங்களைக் கண்டு உறைந்து போயினர். உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்திருந்ததால், கைரேகை மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலமே அவை யாருடையவை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இவர்களின் மோசடி இத்துடன் முடிந்துவிடவில்லை. உடல்களைத் தகனம் செய்துவிட்டதாகக் கூறி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் எலும்புச் சாம்பலுக்குப் பதிலாக காய்ந்த சிமெண்ட் பொடியை வழங்கி ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு பொதுமக்களின் துயரத்தைப் பணமாக்கிய இந்த தம்பதியினர், அந்தத் தொகையைக் கொண்டு கிரிப்டோகரன்சி முதலீடு, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது என சுகபோகமாக வாழ்ந்து வந்தது விசாரணையில் அம்பலமானது.
இந்த கொடூர வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், ஜான் ஹால்ஃபோர்டிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இவர் பல்வேறு மோசடி வழக்குகளுக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலையில், தற்போது இந்த மனிதநேயமற்ற செயலுக்காகக் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரது மனைவி கேரிக்கான தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட உள்ளன.



