தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் நவநீதேஸ்வரர் – சிங்காரவேலர் திருக்கோவில், பண்டைய வரலாற்று சிறப்பும், தெய்வீக அதிசயங்களும் நிறைந்த சிவத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற 274 புண்ணிய தலங்களில் 146-வது தலமாகவும், காவிரி தென்கரையில் அமைந்துள்ள 83-வது சிவத்தலமாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஒருகாலத்தில் விண்ணுலகில் பஞ்சம் ஏற்பட்டது. பசியால் தவித்த காமதேனு தவறுதலாக மாமிசம் உண்டுவிட்டாள். இதைக் கண்ட சிவபெருமான், அவளை புலியாகும் சாபம் அளித்தார். தன் தவறை உணர்ந்த காமதேனு, பூலோகத்தில் உள்ள மல்லிகாரண்யம் எனும் இடத்திற்கு வந்து, அங்கு சிவனை ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டாள்.
அந்த நேரத்தில் அவளது மடியில் இருந்து சுரந்த பால், அங்கிருந்த குளத்தை முழுவதும் நிரப்பியது. அதனால் அந்தக் குளம் “பாற்குளம்”, “தேனு தீர்த்தம்”, “மீர புஷ்கரிணி” என்று அழைக்கப்பட்டது. அந்தக் குளத்திலிருந்த வெண்ணெயால் வசிஷ்ட முனிவர் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்ததும், லிங்கத்தை எடுக்க முயன்றபோது அது சிக்கியதால், அந்த இடம் “சிக்கல்” எனப் பெயர் பெற்றது.
இந்தத் தலத்தில் சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் ஒரே தலத்தில் அருள்பாலிக்கின்றனர். சிவபெருமான் ‘நவநீதேஸ்வரர்’, பார்வதி தேவியார் ‘வேல்நெடுங்கண்ணி’ என அழைக்கப்படுகிறார்கள். ‘சிங்காரவேலர்’ என்ற அழகிய வடிவில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சிங்காரவேலர், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மயில் மீது, வள்ளி மற்றும் தெய்வானையுடன் ஏழடி உயரத்தில் நிற்கின்றார். சிற்பத்தின் அழகில் கூட, அவரது விரல் நகங்கள், நரம்புகள் வரை தெளிவாகக் காணப்படுவது சிற்பக்கலையின் அதிசயம் எனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில், முருகப்பெருமான் அம்மானிடமிருந்து வேல் வாங்கும் தருணம் மிகவும் பிரசித்தம். அந்த நேரத்தில் சிங்காரவேலரின் திருமேனியில் வியர்வை துளிகள் தென்படுவது பக்தர்கள் காணும் தெய்வீக அற்புதம். அதன்பின் அந்த வேலுடன் அவர் திருச்செந்தூருக்கு சென்று சூரபத்மனை வதம் செய்தார் என நம்பப்படுகிறது.
Read more: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா..? வெளியான முக்கிய அப்டேட்..



