தென்காசியை சேர்ந்த கண்ணன் (25) என்பவரும், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) என்பவரும் சொரிக்காம்பட்டி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்தான நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது.
இதற்கிடையே, கண்ணனுக்கும் கலாசூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கலாசூர்யாவின் குழந்தை சிவானி தனக்குத் தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கூறி வந்துள்ளார். கடந்த மாதம் 5-ஆம் தேதி கலாசூர்யா கடைக்குச் சென்றிருந்தபோது, கண்ணன் 2 வயது குழந்தையான சிவானியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த கலாசூர்யா அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி, பண்ணைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிப் புதரில் வீசிவிட்டுச் சென்றனர். பிறகு இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், கலாசூர்யா கணவனுடன் கோபித்துக்கொண்டு கேரளாவில் உள்ள தன் தாய் சந்தியாவின் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு, குழந்தை எங்கே என்று தாய் சந்தியா கேட்டதற்கு சரிவரப் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த சந்தியா, புனலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செக்கானூரணி போலீஸாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.
காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையை அறிந்த கண்ணன், நேற்று கரடிக்கல் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர், செக்கானூரணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கண்ணன், விசாரணையில் குழந்தையை கொன்று உடலை புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். உடனடியாக கண்ணன் மற்றும் கலாசூர்யா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், போலீஸார் காட்டுப் பகுதிக்குச் சென்று தேடியபோது, குழந்தையின் உடல் அழுகி எலும்புகளாக மட்டுமே மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையின் எலும்புகளை ஆய்வுக்காக அனுப்பிய போலீஸார், தம்பதி இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



