கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தில் பெயிண்டராகப் பணிபுரியும் சுரேஷ் (30) என்பவருக்கும் அவரது மனைவி பாரதிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சுரேஷின் மனைவி பாரதி, எதிர்வீட்டைச் சேர்ந்த சுமித்ரா என்பவருடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பாரதி தனது மார்பில் காதலியின் பெயரான ‘SUMI’ எனப் பச்சைக் குத்தும் அளவிற்கு இந்த உறவு தீவிரமடைந்துள்ளது. இந்தத் தகாத உறவு கணவர் சுரேஷுக்குத் தெரிய வந்ததும், அவர் இருவரையும் எச்சரித்துள்ளார். இருப்பினும், இருவரும் தங்கள் பழக்கத்தைக் கைவிடாமல் தொடர்ந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று (நவ. 4), சுரேஷ் வீட்டிற்கு வந்தபோது குழந்தை மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மனைவி பாரதியிடம் விசாரித்தபோது, பால் கொடுத்தபோது புரையேறி விட்டதாக கூறியுள்ளார். இதனால், பதறிய சுரேஷ் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, ஏற்கெவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த போதிலும், சுரேஷ் அதை மறுத்து, மகனின் உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளார். பின்னர், மனைவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, சுரேஷுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதில், பாரதியும் அவரது காதலி சுமித்ராவும் பேசிய உரையாடலில், இருவரும் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுததால் ஏற்பட்ட தொந்தரவை விரும்பாத சுமித்ரா, குழந்தையை கொன்றுவிடுமாறு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பாரதி, வாயைப் பொத்தி குழந்தையை கொன்றதாகவும், குழந்தையின் இறந்த புகைப்படத்தையும் அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது. இந்த உண்மை தெரிய வந்ததும் பாரதி தலைமறைவாகியுள்ளார். தன் மகனைக் கொன்றது மனைவிதான் என்று தெரிந்துகொண்ட சுரேஷ், காவல்நிலையத்தில் புகாரளிக்க அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்தார்.
இதையறிந்த பாரதி, சுரேஷுக்கு போன் செய்து, தவறை ஒப்புக்கொண்டு, புகார் அளிக்க வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். இறுதியில், மனைமுடைந்து போன சுரேஷ் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் கொலைக்குப் பொறுப்பான பாரதி மற்றும் சுமித்ரா ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.



