உலகத்தில் பல்வேறு வினோதமான சட்டங்கள் இருப்பினும், ஸ்பெயினின் லாஞ்சரோன் நகரம் கொண்டுள்ள விதி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஸ்பெயினின் கிரனாடா மாவட்டத்தில் உள்ள லாஞ்சரோன் நகரம், 1999-ஆம் ஆண்டு அதி விசித்திரமான ஒரு விதிக்காக உலகம் முழுவதும் பேசப்பட்டது. அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோவின் ஆணையின் பேரில், நகரத்தில் “இறப்பது சட்டவிரோதம்” என அறிவிக்கப்பட்டது.
கல்லறைகள் நிறைந்திருக்கும் நிலையில், புதிதாக இடமில்லாத காரணத்தால், குடியிருப்பாளர்கள் இதற்காக முன்னுரிமை பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்நகராட்சி அறிவித்தது. இது நகைச்சுவையாக இருந்தாலும் லாஞ்சரோனில் கல்லறை இடப்பற்றாக்குறை இன்னும் தீரவில்லை. 26 ஆண்டுகளுக்குப் பிறகும், லாஞ்சரோனில் ஒரே ஒரு சுடுகாடே உள்ளது. இதனால், இந்த விசித்திரமான விதி இன்னும் நடைமுறையில் உள்ளது.
4,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த நகரம், கனிம வளமான நீரூற்றுகளுக்கும், சிகிச்சை ஸ்பாக்களுக்கும் பிரபலமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பார்சிலோனா மற்றும் மஜோர்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு மாற்றாக, இந்நகரம் டிக்டாக்கில் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது.
லாஞ்சரோனின் நீரூற்றுகள் நூற்றாண்டுகளாக மருத்துவ நோக்கங்களுக்குப் பயன்பட்டு வருகிறது. 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஸ்பா, வாத நோய், செரிமான பிரச்சனைகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. இந்த நகரம் தனது கலாச்சாரத்திலும் தனித்துவம் காட்டுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 24-ம் தேதி நடைபெறும் தண்ணீர் மற்றும் ஹாம் விழா நகரத்தின் நீர்வாழ் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.
மக்கள் தெருக்களில் ஒருவருக்கொருவர் தண்ணீர் ஊற்றிச் சந்தோஷமாக கலந்து கொள்கிறார்கள். லாஞ்சரோனின் பொருளாதாரம் நீரூற்று தொழில், விவசாயம் மற்றும் சுற்றுலாவை மையமாகக் கொண்டுள்ளது. நகரம் பாதாம், ஆலிவ், திராட்சை உற்பத்திக்கும், சிறப்பான ஒயின் மற்றும் ஹாம் தயாரிப்புக்கும் பெயர்பெற்றது.
Read more: பாதி தியேட்டர்ல ஷோ இல்ல.. அதையும் தாண்டி KPY பாலாவின் காந்தி கண்ணாடி செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..?