உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் சீகன்பூர் கிராமத்தை சேர்ந்த ரீனா என்ற பெண், தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர் படுத்திருந்த இடத்தில் துணிமணிகள் மற்றும் நகைகள் அப்படியே இருக்க, 5 அடி நீளமுள்ள பாம்பின் சட்டை மட்டும் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினரும் கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
சினிமா பட பாணியில், ரீனா ‘இச்சாதாரி நாகினியாக’ (மனித உருவம் எடுக்கும் பாம்பு) மாறி மறைந்துவிட்டதாக கிராம மக்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை காட்டுத்தீயாக பரவியது. ஒரு சில நாட்களில் இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அறிவியலுக்குப் புறம்பான இந்தச் செய்தியைப் பலரும் நம்ப தொடங்கிய நிலையில், மாயமான அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு மொத்த கதையையும் மாற்றியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட ரீனா, தான் நாகினியாக மாறவில்லை என்பதையும், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதையும் உறுதிப்படுத்தினார். வீட்டில் பாம்பின் சட்டை கிடந்தது தற்செயலானது என்றும், அதற்கும் தனது காணாமல் போனதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரீனாவின் இந்த நேரடி விளக்கத்தால், அவரைச் சுற்றி நிலவி வந்த ‘நாகினி’ வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன. தற்போது இந்தப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.



