சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இப்படம் வெளியான 15 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 269.81 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் நாளில் இப்படம் ரூ. 65 கோடி வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. முதல் நாள் வசூல் மட்டுமின்றி, அதற்குப் பிறகு வந்த வார இறுதி நாட்களிலும் படத்தின் வசூல் நிலையாகவே இருந்தது. ‘கூலி’ வெளியான முதல் ஏழு நாட்களில் இந்திய அளவில் மட்டும் ரூ. 229.65 கோடி வசூலித்தது.
முதல் வாரத்தில் வசூல் புயலை ஏற்படுத்தியிருந்தாலும், இரண்டாவது வாரம் வசூல் மோசமடைந்தது. இரண்டாம் சனிக்கிழமை ரூ. 10.5 கோடியும், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை ரூ. 11.35 கோடி வசூலானது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் வசூல் சற்று உயரும் போல் தோன்றியது. ஆனால், மீண்டும் வசூல் சரியத் தொடங்கியது.
15-வது நாளில் கூலி படத்தின் வசூல் மிகக் குறைவாக ரூ. 3.25 கோடி மட்டுமே வசூலானது. அதன்படி, ‘கூலி’ படம் 15 நாட்களில் இந்தியா முழுவதிலும் ரூ. 269.81 கோடி வசூலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கூலி திரைப்படம் உலகளாவிய வசூலில் 500 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில், 600 கோடி ரூபாயை எட்டுவதே கடினம் என்ற சூழல் தான் தற்போது நிலவி வருவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் அதிரடியான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் பெரும்பாலான விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களை வைத்துப் பார்த்தபோது, இந்த படத்தின் கதை எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லையென சிலர் கூறுகிறார்கள். படத்தின் கடைசி நிமிடங்களில் சில goosebumps தரும் தருணங்கள் இருந்தாலும், அது முழுக்க முழுக்க படம் மீதான விமர்சனங்களை மாற்றும் அளவில் இல்லை எனவும் பேசப்படுகிறது.