பாமக-வில் தந்தை மகன் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் விரைவில் அன்புமணியை ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், “நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்” என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது.
பாமக இரண்டாக பிரிந்து இருப்பதால் ராமதாஸ் திமுக கூட்டணியில், அன்புமணி அதிமுக கூட்டணியிலும் இணைவார்கள் என பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில் விரைவில் அன்புமணியை சந்திக்கவுள்ளதாக ராமதாஸ் கூறியதால் மீண்டும் பாமக ஒன்றிணைகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தான் பாமக இணையும் என பாமக வட்டாரங்கள் தெரிகிக்கின்றன. இதை சூசகமாக இபிஎஸ்ஸும் நேற்று பரப்புரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறது பாமக. அதிமுக கூட்டணியிலும் பாமக நிச்சயம் இடம்பெறும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
Read more: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு.. தேவசம்போர்டு முக்கிய அறிவுறுத்தல்..!!