திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த வைஷ்ணவி (22) என்பவர், தனது தாய் மாமனையே திருமணம் செய்துகொண்டு, 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில், வேறொரு ஆணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைஷ்ணவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஊரில் நடந்த திருவிழா ஒன்றில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா (24) என்பவரை சந்தித்துள்ளார். சூர்யாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவிழாவில் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் நட்பாக வளர்ந்து, பின்னர் செல்போன் உரையாடல்கள் மூலம் மேலும் ஆழமான கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் வைஷ்ணவியின் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிய வந்தபோது, அவர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல், சூர்யாவின் வீட்டிலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, பெரிய தகராறாக மாறியுள்ளது. குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகும், தங்கள் கள்ளக்காதலை விட முடியாத அந்த ஜோடி, ஒரு கட்டத்தில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளையும் மறந்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளது.
இது குறித்து இருவரின் குடும்பத்தினர் தரப்பிலும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேடசந்தூர் டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை, அவர்களை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
பின்னர், அங்கிருந்து மீட்கப்பட்ட வைஷ்ணவி மற்றும் சூர்யா ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வைஷ்ணவியின் கணவரும் குடும்பத்தினரும், அதேபோல் சூர்யாவின் குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
குடும்பத்தினர் அனைவரும் அவர்களிடம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், குழந்தைகளுக்காக மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் கெஞ்சி கேட்டுக்கொண்டனர். ஆனால், வைஷ்ணவி மற்றும் சூர்யா இருவரும் அதை ஏற்க மறுத்தனர். வைஷ்ணவி, சப்-இன்ஸ்பெக்டரிடம், தனது கணவருடன் செல்ல துளிகூட விருப்பம் இல்லை என்றும், சூர்யாவுடன் செல்லவே விரும்புவதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார். வழக்கமாக, இதுபோன்ற காதல் அல்லது கள்ளக்காதல் விவகாரங்களில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தைகளுக்காகவோ அல்லது சமூக நலனுக்காகவோ தம்பதியினரை குடும்பத்துடன் சேர்த்து வைப்பது வழக்கம். ஆனால், குழந்தைகள் இருந்தும், இந்த கள்ளக்காதல் ஜோடிகளை சேர்ப்பிக்காமல், அவர்களது விருப்பத்தின்படி அனுப்பி வைத்தது இரு குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலால், தற்போது அந்த இரண்டு தம்பதியினரின் 4 குழந்தைகளும் திக்கற்று தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.



