திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு, இந்திராநகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). சமீபத்தில் இவர்கள் உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியபோது, வீட்டின் முன் ஜன்னல் வழியாக விபூதி தூவப்பட்டிருப்பதைக் கண்டு ஆர்த்தி அதிர்ச்சியடைந்தார்.
இதனால் சந்தேகமடைந்த கணவர் ராஜா, வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ராஜாமணி என்ற பெண்மணி ஜன்னல் வழியாக விபூதியை வீசி செல்வதை கண்டார். ராஜாவின் குடும்பத்துடன் சாதாரணமாகப் பழகும் ராஜாமணி ஏன் இப்படிச் செய்தார் என்று அவர்கள் குழப்பமடைந்தனர்.
மேலும், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தரையில் குட்டிச்சாத்தான் பொம்மை ஒன்றும் கிடந்தது. விபூதி மற்றும் பொம்மையை பார்த்து, தங்கள் குடும்பத்திற்குச் சிலர் சூனியம் செய்ய முயற்சிப்பதாக கருதி குடும்பமே பயத்தில் உறைந்தது. இதையடுத்து, ராஜா குடும்பத்தினர் அந்தப் பெண்மணியான ராஜாமணியை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் அளித்த தகவல் மேலும் திடுக்கி செய்தது. அதே பகுதியில் பூக்கடை நடத்தி வரும் மணி என்பவருக்கும் ராஜாவுக்கும் தொழில்ரீதியான முன்பகை இருந்துள்ளது. ராஜாவை பழிவாங்கத் தனக்கு உதவ வேண்டும் என்று மணி கேட்டுள்ளார். மேலும், மணி தன்னை மிரட்டியதாகவும், அவர் கூறியபடியே செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவதாக கூறியுள்ளார்.
வேறு வழியின்றி, அவர் கூறியபடி மந்திரிக்கப்பட்டதாக சொல்லப்படும் விபூதி மற்றும் குட்டிச்சாத்தான் பொம்மை உள்ளிட்ட பூஜை பொருட்களை ராஜாவின் வீட்டுக்குள் வீசியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ராஜாவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ராஜாமணி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
பின்னர், இந்த வினோதமான பில்லி சூனியம் நாடகம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஒரு குடும்பத்தின் மன அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட பூக்கடைக்காரர் மணி மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



