பிகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கையின் போது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பெயரைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குறித்த சில பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்காளர் பட்டியலில் பல போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரே நபர் பல இடங்களில் வாக்களிக்கும் நிலை தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆதாரமாக, சில வாக்காளர் பட்டியல் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். மேலும், பெங்களூரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 50க்கும் மேற்பட்டோர் பெயர்கள் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலை கிளப்பியது. ராகுல் காந்தியின் கூற்றுக்கு தொடர்ந்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையே, தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது, வாக்கு திருட்டு குற்றச்சாட்டை அவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். மேலும், “வாக்கு திருட்டு என்ற சொல்லே அரசியலமைப்பிற்கு எதிரானது” எனக் கடுமையாக சாடினர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பெயரைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 65 லட்சம் பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர்கள் தங்கள் ஆதார் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமர்ப்பித்து மீண்டும் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பிகார் மாநில மாவட்ட ஆட்சியர்களின் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பெயர் நீக்கப்பட்டவர்கள் 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், எந்தவொரு விண்ணப்பமும் அந்தக் கால அவகாசத்திற்கு முன் நிராகரிக்கப்படமாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க கோரும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, உரிய விசாரணைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தங்கள் வாக்குரிமையைப் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.