பீகாரில் வாக்காளர் திருத்தப் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , வாக்குத் திருட்டுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி சார்பிலான வாக்குரிமை பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த 17-ம் தேதி தொடங்கினார்.. இந்த பேரணியில் ராகுல்காந்தி உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.. திமுக எம்பி கனிமொழியும் இதில் கலந்து கொண்டார்.. மேலும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி உள்ளிட்டோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்..
இந்த பேரணியை தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை.. கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது.. ராகுல்காந்தி வாக்கு திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார்.. தேர்தல் ஆணையத்தின் மோசடியை அம்பலப்படுத்திய ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையத்தால் முறையான பதில் தரமுடியவில்லை.. ஆனால் ராகுல் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் கூறுகிறார்..
ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை.. அவர் ஒருபோதும் அரசியலுக்காக பேசியதில்லை.. மிரட்டலுக்கு எல்லாம் ராகுல் அஞ்சப் போவதில்லை.. பாஜகவின் அதிகாரத்தை மக்கள் ஒரு நாள் பறிப்பார்கள்.. பீகாரில் முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக தோற்றுவிடும் என்பதால் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கின்றனர்.. அனைத்து அடையாளம் இருந்தும், மக்களை முகவரி அற்றவர் போல் அழித்தொழிக்கின்றனர்.. இந்தியாவிற்கான வழக்கறிஞராக ராகுல் காந்தி உள்ளார்.. அவரால் இந்தியாவுக்கு நீதி கிடைத்து, ஜனநாயகம் தழைக்கும்..
பீகார் சட்டப்பேரவையில் வெற்றி பெற்றதற்கான விழாவில் விரைவில் நான் பங்கேற்பேன்.. மக்கள் சக்திக்கு முன் எப்படிப்பட்ட சக்தியும் மண்டியிட வேண்டும் என்பதை மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும்.. மக்களின் வாக்குகளை பறிப்பவர்களை மக்கள் பறிப்பர் என்பதற்கு அடையாளம் தான் இங்கு கூடியுள்ள கூட்டம்.. பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்” என்று தெரிவித்தார்..