சினிமாவில் இருந்து அரசியலில் குதித்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். இவர், சமீபத்தில் மதுரையில் நடத்திய மாநாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தேர்தலும் நெருங்கி வருவதால், மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது மேடைகளில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரடியாகவே தாக்கிப் பேசி வருகிறார். பல சகாப்தங்களாக தமிழ்நாட்டை திமுக மற்றும் அதிமுக ஆகிய பெரிய கட்சிகளே ஆண்டு வருகின்றன. ஆனால் 2026 தேர்தல் ஒரு புதிய பரிமாணத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியலுக்குள் நேரடியாக களம் இறங்கியிருப்பது தான்.
இந்த சூழலில் தான், தற்போது விஜய் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என புதிய பொறுப்பை உருவாக்க மாவட்ட செயலாளர்களுக்கு தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஒன்றிய செயலாளர் உள்ள நிலையில், இனி 6 முதல் 30 செயலாளர்கள் வரை நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நிர்வாகிகள் வாக்காளர்களை எளிதில் அணுக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.