2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. தவெக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்து கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.. பாமக, தேமுக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..
ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.. என் வாக்குச்சாவடி, வெற்றிவாக்குச்சாவடி போன்ற முன்னெடுப்புகளை அக்கட்சி தொடங்கி உள்ளது. மேலும் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது.. 12 பேர் கொண்ட இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து அளிக்க உள்ளது..
இந்த நிலையில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு கழகத் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பரப்புரையின் கீழ், கழகத் தலைவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : “உங்க அறிவாளித்தனம் தான் உலகத்திற்கே தெரியும்.. எதையாவது உளறாதீங்க..” செல்லூர் ராஜூவுக்கு சினேகன் பதிலடி..!



