இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த ஏழு ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் உயர்ந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் (WPR), 2023-24ஆம் ஆண்டில் 40.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று, வேலை இன்றியோர் விகிதம் (UR) 2017-18ஆம் ஆண்டின் 5.6 சதவீதத்திலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய முக்கியமான தூண்களில் ஒன்று, 70% பெண் தொழிலாளர் பங்களிப்பை உறுதி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சி: கிராமப்புற இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு 96% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு 43% உயர்ந்துள்ளது.
கல்வி பெற்ற பெண்களின் முன்னேற்றம்: பெண் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு திறன் 2013இல் 42% இருந்ததை விட 2024இல் 47.53% ஆக உயர்ந்துள்ளது. முதுகலை கல்வி மற்றும் அதற்கு மேல் படித்த பெண்களிடையே வேலைவாய்ப்பு விகிதம் 2017-18இல் 34.5% இருந்ததை விட 2023-24இல் 40% ஆகியுள்ளது.
அரசு திட்டங்களின் தாக்கம்: கடந்த 7 ஆண்டுகளில், 1.56 கோடி பெண்கள் முறையான (formal) துறையில் பணியில் சேர்ந்துள்ளனர். இ-ஷ்ராம் போர்ட்டலில் 16.69 கோடி பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் முத்ரா யோஜனா மூலம் வழங்கப்பட்ட மொத்த கடன்களில் 68% பெண்கள் பெற்றுள்ளனர். பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகளில் 44% பெண்கள்.
தொழில்முனைவு & MSME: பெண்களின் சுயதொழில் விகிதம் 2017-18இல் 51.9% இருந்ததை விட 2023-24இல் 67.4% ஆக உயர்ந்துள்ளது. பெண்கள் தலைமையிலான MSMEகள் (சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்) 2010-11இல் 1 கோடியிலிருந்து 2023-24இல் 1.92 கோடியாக உயர்ந்துள்ளன. பெண்கள் சொந்தமான தனியுரிம நிறுவனங்கள் 2010-11இல் 17.4% இருந்ததை விட 2023-24இல் 26.2% ஆகியுள்ளது.
பெண்கள் இனி வெறும் பங்கேற்பாளர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகவும் உள்ளனர் என்று அமைச்சகம் கூறியது. இன்று, பெண்கள் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை வழிநடத்துகிறார்கள், மேலும் மோடி அரசாங்கம் கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் சமமான பணியாளர் வாய்ப்புகள் மூலம் நாரி சக்தியை மேம்படுத்தும் ஒரு உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.