விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்டு, இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்தனர். விசாரணையில், உயிரிழந்த பெண் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (46) என்பது தெரியவந்தது. இவரது கடந்த கால வாழ்க்கை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
மகேஸ்வரிக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி, இரண்டு கணவர்களையும் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை காதலித்த கண்ணன் (52) என்பவருடன் மகேஸ்வரிக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கண்ணன் ஒரு லாரி ஓட்டுநர். அவருக்குத் திருமணமாகி 3 மகள்கள் இருந்தபோதிலும், மகேஸ்வரியுடன் இருந்த பழைய காதலை மீண்டும் புதுப்பித்துள்ளார். இருவரும் தனியாக வீடு எடுத்துத் தங்கி, திருமணத்திற்கு மீறிய உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர்.
வானூர் அருகே தலைமறைவாக இருந்த கண்ணனைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, கொலையின் பின்னணி குறித்து அவர் வாக்குமூலம் அளித்தார். மகேஸ்வரிக்கும் தனக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்தாலும், மகேஸ்வரி பணத்திற்காகப் பலருடன் பழக்கம் வைத்திருந்தது கண்ணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த கண்ணன், மகேஸ்வரியைச் செங்கல்பட்டு படாளம் பகுதிக்கு லாரியில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
மது போதையில் இருந்த மகேஸ்வரியை கண்ணன் சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் எவ்விதச் சலனமும் இன்றி, மகேஸ்வரி அணிந்திருந்த தாலிச் செயின் மற்றும் கம்மல்களைக் கழற்றிக்கொண்ட கண்ணன், சடலத்தைத் திண்டிவனம் அருகே சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். பழைய காதலியைக் கள்ளக்காதலியாக மாற்றிக் கொண்ட லாரி ஓட்டுநர், கடைசியில் அவரையே கொலை செய்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : செங்கோட்டையன் போட்ட மாஸ்டர் பிளான்..!! முடிவை மாற்றினார் ஓபிஎஸ்..!! தவெகவுடன் மெகா கூட்டணி..!!



