பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சமீபத்திய இந்திய பயணம், கலாச்சார மற்றும் மனிதாபிமான அம்சங்களால் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த ஒரு அசாதாரண ஆடம்பர தருணத்தாலும் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக, அனந்த் அம்பானி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸிக்கு ரூ.10.91 கோடி மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியது இந்த பயணத்தின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது.
இந்தியாவில் மெஸ்ஸி, அனந்த் அம்பானி நிறுவிய ‘வந்தாரா’ (Vantara) என்ற வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பார்வையிட சென்றார். அந்த நிகழ்வின் போது, மெஸ்ஸி அணிந்திருந்த ஒரு அரிதான ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நேரில் இருந்தவர்கள் கூறுகையில், மெஸ்ஸி வந்தபோது கையில் எந்த கடிகாரமும் இல்லாமல் இருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் ரிச்சர்ட் மில்லே RM 003-V2 GMT Tourbillon ‘Asia Edition’ என்ற மிக அரிய லிமிடெட் எடிஷன் கடிகாரத்தை அணிந்திருந்தார்.
உலகளவில் 12 கடிகாரம் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு சிறப்புப் படைப்பு. கருப்பு கார்பன் கேஸ், ஸ்கெலட்டன் டயல் ஆகிய தனிச்சிறப்புகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கடிகாரத்தின் விலை அமெரிக்க டாலர் 1.2 மில்லியன், இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,91,68,020 ஆகும்.
இந்த ஆடம்பர பரிசு, லியோனல் மெஸ்ஸி மற்றும் அனந்த் அம்பானி இடையிலான நெருக்கமான உறவைக் குறிக்கும் அடையாளமாக உலகளவில் பேசப்பட்டது. மேலும், அந்த நிகழ்வில் அனந்த் அம்பானி அணிந்திருந்த ஒரு அபூர்வமான கடிகாரமும் கவனம் பெற்றது. அவர் அணிந்திருந்தது ரிச்சர்ட் மில்லே RM 056 Sapphire Tourbillon என்ற, உலகில் ஒரே ஒன்றாக உருவாக்கப்பட்ட (piece unique) கடிகாரம் ஆகும். இந்த கடிகாரத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் 5 மில்லியன், இந்திய மதிப்பில் சுமார் ரூ.45.59 கோடி என கூறப்படுகிறது.
இதன் மூலம், மெஸ்ஸியின் இந்தியப் பயணம், மனிதாபிமான செயல்பாடுகளோடு சேர்ந்து, உலக ஆடம்பர வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாகவும் மாறியது.
மேலும் இந்தியாவின் இந்து தர்ம மரபுகளுக்கேற்ப, தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன் மெஸ்ஸி பாரம்பரிய இந்து வழிபாட்டு முறைகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றார்.
அவரை நாட்டுப்புற இசை, மலர் தூவல், மற்றும் சம்பிரதாய ஆரத்தி ஆகியவற்றுடன் மரியாதையாக வரவேற்றனர். இந்த நிகழ்வில், மெஸ்ஸியுடன் அவரது இண்டர் மியாமி அணியின் சக வீரர்கள் லூயிஸ் சுவாரெஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மெஸ்ஸி மகா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்று, அம்பை மாதா பூஜை, கணேஷ் பூஜை, ஹனுமான் பூஜை மற்றும் சிவ அபிஷேகம் ஆகிய வழிபாடுகளை செய்தார். இவை அனைத்தும் ஒற்றுமை, அமைதி மற்றும் அனைத்து உயிர்களிடமும் மரியாதை என்பவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்தன.
பின்னர், மெஸ்ஸி வந்தாராவின் பரந்த வனவிலங்கு பாதுகாப்பு சூழலை நேரில் பார்வையிட்டார். அங்கு மீட்கப்பட்டு பராமரிக்கப்படும் சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள், யானைகள், தாவரவிலங்குகள் மற்றும் ஊர்வன்கள் ஆகியவற்றைச் சந்தித்து, மேம்பட்ட கால்நடை மருத்துவ சேவைகளின் கீழ் அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதையும் அறிந்தார்.
இந்த பயணத்தில் மிகவும் மனதை நெகிழ வைத்த தருணம், யானை பராமரிப்பு மையத்தில் நிகழ்ந்தது. அங்கு, மீட்கப்பட்ட ‘மணிக்லால்’ என்ற குட்டி யானையுடன் மெஸ்ஸி, கால்பந்து அடிப்படையிலான விளையாட்டு செயல்பாட்டில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு, விளையாட்டும் கருணையும் எல்லோருக்கும் பொதுவான மொழி என்பதை வெளிப்படுத்தி, பராமரிப்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஆழமாக பாதித்தது.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி, ஒரு சிங்கக் குட்டிக்கு ‘லியோனல்’ என்று மெஸ்ஸியின் பெயரை வைத்தனர். இது நம்பிக்கையும் தொடர்ச்சியையும் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. வந்தாராவின் பணிகளைப் பாராட்டிய மெஸ்ஸி, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகள் “உண்மையிலேயே அழகானவை” என்றும், அவை தன் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
Read More : ஓய்வூதியம் ரூ. 10,000 ஆக உயர்த்தப்படுமா? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.!



