சுப்பிரமணியபுரம் பட பாணியில் பெண் மூலம் இளைஞனை வரவழைத்து மிளகாய் பொடி தூவி வெட்டிக் கொன்றதாக உயிரிழந்த ஐடி ஊழியரின் தந்தை கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி கவின். 25 வயதான இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே கேடிசி நகரில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளித் தோழியான ஒரு பெண்ணுடன் கவினுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
கவின் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞன் என்பதால் பெண்ணின் தம்பி சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை.. கவினிடம் இது குறித்து பேச வேண்டும் என்று கூறி இரு சக்கர அழைத்து சென்றுள்ளார். கே டி சி நகர் அருகே அஷ்டலட்சுமி நகர் முதலாவது தெரு அருகே அம்பாள் மருத்துவமனை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின் மீது சுர்ஜித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகம் கை கால் என அனைத்து பகுதிகளிலும் பலத்த காயமடைந்த கவின் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “ தனது அக்காவிற்கு கவின் காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்,” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். உயிரிழந்த கவின் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் மற்றும் சுர்ஜித் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுர்ஜித்தின் பெற்றோர், சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேனி, மணிமுத்தாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிகின்றனர். இதனால், இந்தக் கொலை சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தனது மகன் கொல்லப்பட்டது குறித்து கவினின் தந்தை சந்திரசேகர் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவர் பேசியதாவது, “என் மகனும் அந்த பெண்ணும் 11ம் வகுப்பு முதலே காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று அந்த பெண் தான் தனது மகனை பார்க்க வரும் படி அழைத்தார். அந்த பெண்ணின் அம்மா, அப்பா, தம்பி எல்லாம் நைசாக பேசி வரச் சொல்லி இருக்கிறார்கள். சும்மா பேசுவோம், பேசி முடித்துவிடுவோம் வாங்க என்றே வரச் சொல்லியுள்ளனர். இதை நம்பியே எனது மகனும், மனைவியும் போய் உள்ளனர். எனது மனைவி உள்ளே சென்ற நிலையில், எனது மகன் வெளியே போன் பேசிக் கொண்டு இருந்தான்.
அப்போது திடீரென கண்ணில் வத்தல் பொடியை வீசி, பிறகு வெட்டிவிட்டான். இதற்கு அவரின் அம்மா, அப்பா எல்லாம் உடந்தை. என் மகனை கொன்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.