கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் உள்ள காலணி ஒன்றில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2ஆம் ஆண்டு கல்லூரி படித்து வரும் அந்தச் சிறுமியின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து சிறுமியின் தாயாரிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று, போதையில் வீட்டுக்கு வந்த அந்தத் தொழிலாளி, தனது மகளை குண்டம்மா முகாமில் இருக்கும் நண்பர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். பிறகு, சில நாட்களுக்கு அந்த நண்பரின் வீட்டில் தங்கியிருக்கும்படி மகளை கட்டாயப்படுத்தியுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தந்தையின் நண்பன், அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தன் தந்தையிடம் கூறியபோது, அவர் கொஞ்சமும் மனிதாபிமானமின்றி நடந்துகொண்டார். தந்தையோ, “என் நண்பனுக்குத்தான் உன்னைத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால், உன் அம்மாவை கொலை செய்துவிடுவேன்” என்று கூறிச் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதன் பிறகு, தந்தையின் நண்பன் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து, யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இந்நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக் கண்ட அவரது தாயார், உடனடியாக சிறுமியைக் காப்பாற்றி, என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். அப்போதுதான் நடந்த கொடூரங்கள் அனைத்தையும் சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, தாயின் உதவியுடன் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், தற்போது வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்திற்கு காரணமான சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பன் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Read More : “திமுகவின் கொள்கையே கொள்ளை அடிப்பது தான்”..!! ஆளுங்கட்சியை அலறவிட்ட TVK தலைவர் விஜய்..!!



