விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.
எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, இது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பினர்.. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..
இந்த நிலையில் ஜனநாயகன் சென்சார் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தணிக்கை வாரியம் தரப்பு “ ஜனநாயகன் படத்தின் 14 காட்சிகளில் மாறுதல் கோரினோம். இந்த மாற்றம் கோரிய பின்னர் தான் படத்திற்கு எதிராக புகார் வந்தது…” என்று தெரிவித்தது.
அப்போது ஜனநாயகன் படத்திற்கு எதிராக புகார் கடிதம் எழுதியது யார்? எங்கிருந்து புகார் எழுதினர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தில் இருந்து மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு புகார் வந்தது என்று தணிக்கை வாரியம் தரப்பு தெரிவித்தது.
மேலும் புகார் கடிதம் எழுதிய நபர் படத்தை பார்க்கவில்லை. மற்ற 5 நபர்கள் தான் படம் பார்த்தனர்.. படம் பார்ப்பதற்கு அதிகாரம் உள்ள நபர்கள் மட்டுமே ஜனநாயகன் படத்தை பார்த்தனர். அட்வைசரி போர்டில் உள்ளவர்கள் படத்தை பார்த்தாலும் இறுதி முடிவை வாரியம் தான் எடுக்கும்..” என்று தணிக்கை வாரியம் தெரிவித்தது..
அப்போது நீதிபதிகள் “ மும்பையில் இருந்து அனைத்து படங்களையும் பார்த்து சான்று வழங்க முடியாது. அட்வைசரி போர்டு தேவை என்பதை புரிந்து கொள்கிறோம்.” என்று தெரிவித்தனர்..
தொடர்ந்து தணிக்கை வாரியம் “ படத்தின் வெளியீட்டு தேதி முடிவெடுக்கப்பட்டுவிட்டதால் அவகாசம் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.. ரிட் மனுவில் பதில் மனு தாக்க செய்ய 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 – 3 நாட்களாவது அவகாசம் அளித்திருக்க வேண்டும்.. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்ததே தவறு..
படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவு தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியும்.. இந்த முடிவு ஜனவரி 5-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. சான்று வழங்கும் நடைமுறையில் நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க தனி நீதிபதி வாய்ப்பளித்திருக்க வேண்டும்..” என்று தணிக்கை வாரியம் வாதிட்டது.



