நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.. இதனால் ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
மத்திய அரசு வேண்டுமென்றே தணிக்கை சான்றிதழை வழங்காமல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை திரையிட விடாமல் சென்சார் போர்டு மூலம் பிரதமர் மோடி தடுப்பதாக ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவத்தி குற்றச்சாட்டி உள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ 9 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவை ஒடுக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், நரேந்திர மோடி மீண்டும் வேண்டுமென்றே ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை நிறுத்தி வைத்து, அதன் வெளியீட்டைத் தடுப்பதன் மூலம் தமிழ் மக்களை அவமதிக்கிறார்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
மேலும் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி “ விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர்.. மக்கள் அவரை ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருகின்றனர்.. அவர் ஒரு சக்தியாக தமிழகத்தில் உருவாகிவிட்டார்..” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..



