தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திரைத்துறையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் சிரஞ்சீவியின் சக்திவாய்ந்த நடிப்பு, கவர்ச்சிகரமான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல் ஆகியவை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சிரஞ்சீவி..
1978 ஆம் ஆண்டு வெளியான பிரணாம் கரீடு என்ற படத்தின் மூலம் அவர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டில், புனதிரல்லு திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார், இது அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதைப் பெற்றுத் தந்தது.
சிரஞ்சீவியின் வெற்றி ஒரே இரவில் நடக்கவில்லை. தெலுங்குத் துறையில் அவரது தொடர்ச்சியான கடின உழைப்பும் உறுதியும் அவரை இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாற்றியது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும், நடிகர் ஒரு வருடத்தில் தொடர்ச்சியாக 14 வெற்றிகளைப் பெற்று, இந்திய சினிமாவின் “புதிய பண இயந்திரம்” என்ற பட்டத்தைப் பெற்றார்.
ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்
அவர் ஒரு சில இந்தி படங்களிலும் தோன்றினாலும், தெலுங்கு திரையுலகில் தனது தொடர் வெற்றிகள் மூலம் சூப்பர் ஸ்டாராக மாறினார்.. 90களின் முற்பகுதியில் அமிதாப் பச்சன் விடுமுறையில் இருந்ததால், சிரஞ்சீவி வந்து இந்தியாவின் மிகவும் பணக்கார நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
இந்தியாவிலேயே முதன்முதலில் ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் சிரஞ்சீவி தான்.. இதைத் தொடர்ந்து தான் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற பிற ஜாம்பவான்களும் ரூ.1 கோடி சம்பளம் பெற்றனர்.. பின்னர் அமிதாப் பச்சனும் அதைப் பின்பற்றி, படங்களில் நடிக்கத் திரும்பிய பிறகு அந்த சம்பள அளவை எட்டிய முதல் இந்தி நடிகரானார்.
90களின் பிற்பகுதியில், பாலிவுட் கான்களான ஷாருக், அமீர் மற்றும் சல்மான் ஆகியோரும் ஒரு படத்திற்கு ரூ. 2-3 கோடி வசூலிக்கத் தொடங்கினர். ஆனால், அடித்தளமிட்டது சிரஞ்சீவிதான்.
கின்னஸ் சாதனையாளர்
2024 ஆம் ஆண்டில், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சிரஞ்சீவி இடம்பிடித்தார்.. இந்தியத் திரைப்படத் துறையில் மிகவும் திறமையான நட்சத்திரமாக கின்னஸ் சாதனை படைத்தார்.. 46 ஆண்டுகளில் 537க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 24,000 நடன அசைவுகளுடன் தனது நடனத்திற்காக நடிகர் சாதனை படைத்தார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேறு எந்த நட்சத்திரமும் இந்த சாதனையை அடையவில்லை.
150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி தொடர்ந்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.. ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும், கொடையாளராகவும், அவர் தொடர்ந்து தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து இந்திய பொழுதுபோக்குத் துறையை வடிவமைத்து வருகிறார்.