குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ்ஜில் உள்ள சாம்த்ரா கிராமத்தில், பணப் பிரச்சனை காரணமாக 2-வது மனைவி தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனஜிபாய் என்கிற கிம்ஜிபாய் விஷ்ரம்பாய் கெராய் (60) என்ற அந்த முதியவர், தனது முதல் மனைவி இறந்த பிறகு 45 வயதுடைய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் இருவர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். 3-வது மகன் திருமணமான நிலையில் சாம்த்ராவிலேயே தனியாக வசித்து வருகிறார். மகன்கள் தனியாக வசிப்பதால், முதியவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, முதியவர் தன்ஜிபாய்க்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையே பணம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதியவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி, “இன்று நான் உன்னை உயிருடன் விடமாட்டேன்” என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர் தன்ஜிபாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். முதியவர் வலியால் அலறவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மன்குவா காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, முதியவரின் இரண்டாவது மனைவியைக் கைது செய்தனர். மேலும், விசாரணையின்போது மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியானது. முதியவர் 2-வதாக திருமணம் செய்த பிறகு, முதல் மனைவியின் தங்க நகைகளான மங்களசூத்திரம், பட்டாலா, காந்தி, மோதிரங்கள் போன்றவற்றை இரண்டாவது மனைவி எடுத்துச் சென்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் மற்றும் நகைப் பின்னணியில் நடந்த இந்த கொடூரக் கொலை அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.