தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக வெளியான பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அவர் மக்கள் மத்தியில் கூட்டணி குறித்தும், திமுக அரசு குறித்தும் அதிரடியான கருத்துக்களை கூறியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அமைத்திருப்பது “வெற்றுக் கூட்டணி” என்று விமர்சித்தார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று சூளுரைத்த அவர், இந்தக் கூட்டத்தில் தவெக கொடியுடன் விஜய் ரசிகர்கள் சிலர் பங்கேற்றதை கண்டார். அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என்று அவர் பேசியபோது, தவெக கொடியை ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டவாறு உயர்த்தினர். அதைக் குறிப்பிட்டு அவர், “பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியை துளைக்கும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பே திமுக அரசு அவசரமாக ஏன் விசாரணை குழுவை அமைத்தது என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரு துறையின் செயலாளர் திமுகவின் கைக்கூலியாக பேட்டியளிப்பதாகவும், ஏடிஜிபியின் கருத்துகள் ஏற்புடையதல்ல என்றும் கூறினார். மேலும், தவறு செய்த காவல்துறையை வைத்தே விசாரணை நடத்தினால் எப்படி நியாயம் கிடைக்கும்? என்று கேள்வி எழுப்பிய அவர், 41 உயிரிழப்புகளுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்.