சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு, அவரது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்த சாந்தி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வேலூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு சாந்தியின் முதல் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவரைக் கவனித்துக் கொள்வதற்காகச் சாந்தி தனது மகளை அவரது அத்தை வீட்டில் விட்டுச் சென்றார். அப்போது, பகுதி நேர வேலை தேடுவதாகச் சிறுமி தனது அத்தையிடம் கேட்டுள்ளார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட அத்தை, துணி எடுத்துக் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்குச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பிறகு, சிறுமியின் அத்தை மேலும் இரண்டு முறை அந்தச் சிறுமியை அதே வீட்டிற்கு அழைத்துச் சென்று ஸ்ரீயுடன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார். இந்தச் செயல்களை வெளியே யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதால், பயந்துபோன சிறுமி யாரிடமும் சொல்லாமல் தனது தாயுடன் சென்று வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு சிறுமி தனது பாட்டியின் துக்க நிகழ்விற்காகக் கோடம்பாக்கம் சென்றபோது, அங்கு வந்த அத்தை சிறுமியிடம் சொத்துக்காக வந்தியா என்று சண்டையிட்டுள்ளார். அதோடு இல்லாமல், “உன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி, உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் அத்தை மற்றும் கோடம்பாக்கம் ஸ்ரீ ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ மீது ஏற்கனவே ஒரு தொழிலதிபரை கடத்தியது, நில அபகரிப்பு மற்றும் சில போக்சோ வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



