விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கரும்புத் தோட்டத்தில் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அம்பிகா என்ற பெண்ணுடன் சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சங்கர் வேலையை முடித்ததும் தன் வீட்டிற்கு செல்லாமல், பெரும்பாலும் அம்பிகாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்த சூழலில், இருவேல் பட்டு பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவர் வேலை நிமித்தமாக மரகதபுரம் பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அன்புவுக்கும் அம்பிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் செல்போனில் பேச தொடங்கியுள்ளனர்.
இதைக் கேள்விப்பட்ட சங்கர், அம்பிகாவிடம் இனிமேல் அன்புவுடன் பேசக் கூடாது என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், அம்பிகா தொடர்ந்து அன்புவுடன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், அம்பிகாவை தாக்கியுள்ளார். மேலும், அம்பிகா மூலமாக அன்புவுக்கு போன் செய்து, “நானும் அவளும் பல ஆண்டுகளாக பழகி வருகிறோம். அவள் எனக்கு மட்டும்தான் சொந்தம். இனிமேல் அவளுடன் பேசக்கூடாது” என்று மிரட்டியுள்ளார்.
அதற்கு அன்பு, “அம்பிகாவுக்கு என்னுடன் பேசப் பிடித்திருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்று பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், அன்புவை மிகவும் தகாத வார்த்தைகளால் பேசித் திட்டியுள்ளார். சங்கரின் இந்தச் செயலால் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற அன்பு, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதையடுத்து, தனது நண்பர்களுடன் அம்பிகாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு உறங்கிக்கொண்டிருந்த சங்கரை எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது, சங்கரின் கண்களை காயப்படுத்திய கும்பல், அவருடைய ஆணுறுப்பையும் கொடூரமாக அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
பின்னர், சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சங்கரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அன்பு மற்றும் அவருடைய நண்பர்களை தீவிரமாக தேடி வருவதுடன், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



