திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சின்னேரிபாளையம் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில், 58 வயது மரம் வெட்டும் தொழிலாளியின் சடலம் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் காதலியான 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்து, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சின்னேரிபாளையம் சாலையில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில், கறிக்கட்டையாக எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக அதிகாலையில் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்தச் சடலம் திருப்பூர் வள்ளுவர் வீதியைச் சேர்ந்த சின்னப்ப ராஜ் (58) என்பவருடையது என்பதை கண்டறிந்தனர். மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, கூடலூரை சேர்ந்த 42 வயதான பூமணி என்பவர் அவிநாசி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சின்னப்ப ராஜை தான் தான் கொன்றதாக அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், கொலையின் முழுப் பின்னணியும் வெளிவந்தது.
சின்னப்ப ராஜ், மரம் ஆலையில் வேலை செய்யும் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாலேயே அவரது மனைவி பிள்ளைகளுடன் பிரிந்து சென்றார். அதன் பிறகு, அவர் பூமணியுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். சமீபத்தில், சின்னப்ப ராஜ் பூமணியுடன் பேசுவதைத் தவிர்த்து, வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டதால் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
எனவே பூமணி, சின்னப்ப ராஜை வழக்கமாக சந்திக்கும் இடமான சின்னேரிபாளையத்திற்கு வரவழைத்தார். அங்கு இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, பூமணி வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மதுவை அவருக்குக் கொடுத்துள்ளார். சின்னப்ப ராஜ் போதையில் சரிந்தபோது, பூமணி தனது பவர் பேங்கால் தலையில் ஓங்கி அடித்து அவரை தள்ளியுள்ளார்.
அதன்பின், கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை அவர் மீது ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் இரவு 11 மணியளவில் நடந்துள்ளது. இந்நிலையில், பூமணியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.



