ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த தீப்தி (17) என்ற மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞரை சிறுவயது முதலே அறிந்து பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. தீப்தி தனது சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்த நிலையில், மகள் காதலிப்பது தீப்தியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால், தீப்தி அசோக்குடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இருப்பினும், அசோக் தொடர்ந்து மாணவிக்கு பலமுறை தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சூழலில், தீப்தியின் தோழி ஒருவர், வீட்டில் அனைவரும் வெளியில் சென்றிருந்தபோது, தீப்தியை தனியாக வெளியில் அழைத்து வந்துள்ளார். அப்போது தீப்தியை சந்தித்த அசோக், அவருடன் சமாதானம் பேச முயற்சித்துள்ளார்.
பின்னர், தீப்தியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அசோக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்துச் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். காதலியைக் கொலை செய்த மனவேதனையில் வீட்டுக்குத் திரும்பிய அசோக், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்று ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மகளை காணாததால் தீப்தியின் பெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்து தீப்தியின் உடலை மீட்டனர். உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிய நிலையில், அதேசமயம் அசோக் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தகவல் போலீசாருக்குக் கிடைத்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், தீப்தியும் அசோக்கும் காதலித்தது உறுதி செய்யப்பட்டது. காதலை தீப்தி மறுத்ததால், ஆத்திரமடைந்த அசோக் இந்தக் கொடூரச் செயலைச் செய்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவம் காக்கிநாடா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.