மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அண்மையில் நடந்த ஒரு காதல் சம்பவம், சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நம்பிக்கை, துரோகம், நட்பு, திருமணம் என அனைத்தும் இந்த ஒரே சம்பவத்தில் அடங்கியுள்ளது.
இந்தூரைச் சேர்ந்த 20 வயதுடைய ஷ்ரத்தா திவாரி, தனது பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டிருந்த ஷ்ரத்தா, நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இருவரும் முன்பே திட்டமிட்டிருந்தபடி, ரயில் நிலையத்தில் ஷ்ரத்தா வந்து சேர்ந்தார். ஆனால், காதலன் அந்த இடத்திற்கு வரவே இல்லை. அவரை திரும்பத் தொடர்புகொள்ள முயற்சி செய்தும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. கடைசியாக காதலன், “எனக்கு இந்த திருமணத்தில் ஆர்வமில்லை” என்று தெரிவித்து அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
காதலனை நம்பி பெற்றோரையும், வீட்டையும் விட்டு வந்த ஷ்ரத்தா, ரயில் நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார். அப்போது வீட்டிற்கும் திரும்ப முடியாத நிலையில் இருந்தார். அதே நேரம், அதே ரயில் பெட்டியில், ஷ்ரத்தாவின் கல்லூரி நண்பரான கரண் பயணம் செய்துகொண்டிருந்தார். ஷ்ரத்தாவின் நிலையை பார்த்த கரண், அவரிடம் உருக்கமாக பேசியுள்ளார்.
பிறகு, “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என ஷ்ரத்தாவிடம் கரண் கூறியுள்ளார். இதையடுத்து, அவரும் சம்மதித்த நிலையில், இருவரும் அருகிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களின் பாதுகாப்புக்காக காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
பின்னர், போலீசாரிடம் ஷ்ரத்தாவின் தந்தை, “10 நாட்கள் என் மகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருப்பேன். அந்த 10 நாட்களும் இருவரும் பேசாமல் இருங்கள். பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், நான் ஏற்க தயார்” என்று கூறினார். இதற்கு புதுமண தம்பதிகளும் ஒப்புக்கொண்டனர்.