தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், புத்தாண்டின் முதல் முக்கிய நிகழ்வாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6-ஆம் தேதி கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆண்டிற்கான மிக முக்கியமான அதிரடி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கம், ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடருக்கான ஆளுநர் உரையை இறுதி செய்வதே ஆகும். ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய மாநில அரசின் புதிய கொள்கை முடிவுகள், சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் விரிவாக ஆலோசனை நடத்தி ஒப்புதல் அளிக்க உள்ளார்.
2026-இல் தேர்தல் நடைபெற உள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்படலாம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) குறித்த அறிவிப்பு இந்தக் கூட்டத்தின் ஹைலைட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ககன்தீப் சிங் பேடி குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜனவரி 6-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அதே நாளில் அவர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக ஒரு நல்ல செய்தியை வழங்க அரசு முன்வரலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குடும்ப அட்டைதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொங்கல் பரிசுக்கான ரொக்கத் தொகை குறித்த இறுதி முடிவும் இந்தக் கூட்டத்தில் எட்டப்பட வாய்ப்புள்ளது. இதனுடன் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.



