தருமபுரி மாவட்டம் தோக்கம்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த 28 வயது பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தின் பின்னணி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கோமதி என்பதும், அவர் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவருக்கும் தருமபுரி டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) ராஜாராமுக்கும் இடையே கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது.
தனியாக வீடு எடுத்து கள்ளக்காதலி கோமதியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் ராஜாராம். ஆனால், இந்த கள்ளக்காதல் விவகாரம் ராஜாராமின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால், கோமதியுடனான தொடர்பை ராஜாராம் துண்டித்துள்ளார். இதுகுறித்து கோமதி, கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, “கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஊற்றினால் பிரச்சனை சரியாகும்” என்று கூறி, கடந்த 21ஆம் தேதி இரவு கோமதியை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார் ராஜாராம்.
அங்கு சென்றதும், கோமதியை கிணறு அருகில் கூட்டிச் சென்று அவரை கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். பின்னர், ராஜாராம் அங்கிருந்து தப்பிச் சென்றார். அப்போது அதிர்ஷ்டவசமாக, கிணற்றின் சுவற்றைப் பிடித்துக்கொண்டு தத்தளித்த கோமதியை, அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து மீட்டுள்ளனர். பின்னர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோமதி அளித்த புகாரின் பேரில், போலீசார் ராஜாராமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த, தருமபுரி மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன், ராஜாராமை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார். சட்டத்தை காக்க வேண்டிய காவலரே இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தினமும் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கிறீங்களா..? யாருக்கெல்லாம் ஆபத்து..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!



