உலகம் முழுவதும் மல்யுத்தப் போட்டிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்கப்படுகிறது. WWE என்ற உலகளாவிய மல்யுத்த நிறுவனம், திங்கட்கிழமைகளில் WWE RAW மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் WWE SmackDown என வாரந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் பிரபலமான மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ்.
90-களில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவுக்கு உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. தொழில் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களை சந்தித்துள்ள ரோமன் ரெய்ன்ஸின் நிகர மதிப்பு மற்றும் அவரது வாழ்க்கைப் பயணம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பல்வேறு அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி ரோமன் ரெய்ன்ஸின் நிகர மதிப்பு சுமார் ரூ.176 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருமானம் அவருக்கு WWE, திரைப்படங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வணிகங்கள் மூலம் கிடைக்கிறது. WWE-யில் அதிக சம்பளம் வாங்கும் மல்யுத்த வீரர்களில் ஒருவரான ரோமனின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.44 கோடி ஆகும். இதனுடன், போட்டி கட்டணங்கள், போனஸ், பே-பெர்-வியூ மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் மூலமும் அவர் கூடுதல் வருமானம் ஈட்டுகிறார்.
மல்யுத்தத்தை தாண்டி, ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இது தவிர, நைக், சி4 எனர்ஜி, ஷேடி ரேஸ் போன்ற பல முன்னணி பிராண்டுகளுக்கு அவர் விளம்பரத் தூதராக உள்ளார். மேலும், ‘ட்ரைபல் சீஃப்’ என்ற தனது சொந்த பிராண்ட் மூலம் வருமானம் ஈட்டுகிறார்.
ரோமன் ரெய்ன்ஸின் உண்மையான பெயர் லீட்டி ஜோசப் அனோய். அவர் தனது மனைவி கலினா பெக்கர் மற்றும் குழந்தைகளுடன் புளோரிடாவில் வசிக்கிறார். புளோரிடா உட்பட பல இடங்களில் அவருக்கு விலை உயர்ந்த சொத்துக்களும், மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் போன்ற சொகுசுக் கார்களும் உள்ளன.
ரோமன் ரெய்ன்ஸின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பகுதி, ரத்தப் புற்றுநோயான லுகேமியாவுக்கு எதிரான அவரது போராட்டம். 2007 முதல் இந்தப் நோயுடன் போராடி வந்த அவர், 2018ஆம் ஆண்டில் நோய் மீண்டும் வந்ததால் WWE-யில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், 2019ஆம் ஆண்டில் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவித்து மீண்டும் மல்யுத்த உலகிற்கு திரும்பினார்.
இந்தப் போராட்டத்தில் அவர் காட்டிய தைரியமும் உறுதியும் அவருக்கு இன்னும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது. புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மேக் எ விஷ் பவுண்டேஷன் போன்ற பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.