பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் அவதூறாக பேசி தன்னிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பறித்துவிட்டதாக ஆயிஷா சாதிக் என்ற சினிமா தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.. இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்..
இதையடுத்து ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம் எனவும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.. புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? காவல்துறையின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்த நீதிமன்றம் இது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்தது.
இதையடுத்து சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை உடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வேண்டும் என சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது..



