ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள துனி பகுதியில் ஒரு தனியார் விடுதியின் உரிமையாளர் 10 வயது சிறுமியை ஒரு மாதம் முழுவதும் கொடூரமாக தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தங்களது மகளையும் மகனையும் துனி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் விடுதியில் படிக்கச் சேர்த்துள்ளனர்.
இந்த விடுதியை நடத்திய உரிமையாளர், சிறுமியின் மீது தனக்குள்ள தீய எண்ணத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து ஒரு மாத காலமாக அந்த சிறுமியைக் கொடூரமாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்தச் செயலை மறைப்பதற்காக, சிறுமியின் சகோதரனை வேறு அறைக்கு அனுப்பிவிட்டு தனியாக இந்தக் கொடுமையை நிகழ்த்தியுள்ளார்.
சிறுமி பயத்தின் காரணமாகவும், விடுதி உரிமையாளர் கொலை மிரட்டல் விடுத்ததாலும் யாரிடமும் நடந்ததை கூறாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், சிறுமியின் உடல்நிலை மோசமடையவே, அவர் விடுதிக்குச் செல்ல மறுத்துள்ளார். அப்போது என்ன காரணம் என்று பெற்றோர் விசாரித்தபோதுதான், விடுதி உரிமையாளர் செய்த கொடூரங்கள் குறித்து சிறுமி கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதையடுத்து, அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீஸார் விடுதி உரிமையாளர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.



