திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே லாரி ஓட்டுநரான கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (27) என்ற லாரி ஓட்டுநர், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிளாவின் நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்ததில், ஷர்மிளா அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அவருடன் பல இடங்களுக்கு சென்று ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுத்து வந்துள்ளார். இதைக் கண்டறிந்த கணவர் விஜய், ஷர்மிளாவை தொடர்ந்து கண்டித்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி கடுமையான தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, ஷர்மிளா சமீபத்தில் தனது தாய் ராணி பாத்திமா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, விஜய் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில், போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து, மனைவி ஷர்மிளா மற்றும் அவரது தாய் ராணி பாத்திமா ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், இருவருமே சேர்ந்து விஜய்யை கொலை செய்தது தெரியவந்தது. ஷர்மிளா அளித்த வாக்குமூலத்தில், “எனது கள்ள உறவை கணவர் கண்டித்ததால், கடந்த 17-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நானும், எனது தாய் ராணி பாத்திமாவும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்” என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலையை மறைப்பதற்காக, இருவரும் சேர்ந்து விஜய்யின் கழுத்தில் கயிற்றை கட்டி, ஜன்னலில் தூக்கில் தொங்கவிட்டது போல் சடலத்தை வைத்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. மறுநாள் காலையில் எதுவும் தெரியாதது போல் கதவை திறந்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடியுள்ளனர். இந்த வழக்கில் ஷர்மிளா மற்றும் அவரது தாய் ராணி பாத்திமா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
Read More : இன்டர்நெட் இல்லாமல் கூட Google Map பயன்படுத்தலாம்..!! இது பலருக்கும் தெரியாது..!! நோட் பண்ணிக்கோங்க..!!



